அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி

May 6, 2016
 

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில்  முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத் தலைநகரில் தமிழ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

குளோபல் டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் இத் தொலைக் காட்சியைத் துவங்கி வைத்தார்.

 

வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபிநாத், டாக்டர். ராஜன் நடராஜன் அவர்களை நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி, “அமெரிக்காவிலேயே ஒரு மாநில அரசின் அத்தகைய உயர் பதவி வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர்”, என்று கூறினார். பின்பு அவரின் கேள்விகளுக்குப் பதிலளித்து, டாக்டர் ராஜன் நடராஜன் பேசியது: “அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களுக்கு முன்பு சுமார் 1.3 லட்சமாக இருந்தது, இப்போது 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. வாஷிங்டனில் மட்டும் சுமார் 10,000 தமிழர்கள் வசிப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் அதிக அளவில் தமிழர்கள் வசித்தாலும், அவர்களுக்கென ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இது வரையில் இல்லை. ஆகவே முதன் முறையாக அமெரிக்காவில் இத் தமிழ்த் தொலைக்காட்சியைத் துவங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தகைய வரலாறு படைக்கும் வகையில் இத் தமிழ் தொலைக் காட்சியைத் துவங்க ஏதுவாக உதவிய குளோபல் டெலிவிஷனின் முதன்மை அதிகாரி நிலிமா மெஹ்ரா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வசிக்கும் தமிழர்களின் வாழ்வியல், தொழில், பொருளாதாரம், கலை, இலக்கியம், போன்றவற்றை எடுத்துச் செல்லும் ஊடகமாக இத் தொலைக்காட்சி செயல் படும். அதுமட்டுமல்லாமல், இங்கு தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் பெருகி வருகின்றன. வாஷிங்டன் வட்டாரத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்று வருகின்றனர். அப்பள்ளி நிகழ்வுகள், தமிழ்க் குழந்தைகளின் சாதனைகள், தமிழ்ச் சங்க மற்றும் தமிழர்களின் பல்வேறு அமைப்புகளின் நிகழ்வுகள் என்று பலதரப் பட்ட நிகழ்ச்சிகளை இத்தொலைக்காட்சி வழங்க உள்ளது. இதனால் இங்கு வாழும் தமிழர்களின் முக்கிய ஊடகமாக இத் தொலைக்காட்சி திகழும். அது மட்டுமல்லாமல், இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும், ஒரு ஊடகப் பாலமாகவும் இத் தொலைக்காட்சி செயல் படும்”, என்றார்.
– டாக்டர் ராதாகிருஷ்ணன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*